தென்மேற்கு பருவக்காற்று என்ற தென்றல்
இந்திய துணைக்கண்டத்தில் மே கடைசியில் துவங்கி செப்டம்பர் மாதம் வரையிலும் நீடித்து பெய்கிறது தென்மேற்கு பருவக்காற்று உண்டாக்கும் பருவமழை! எங்க ஊர்ப்பக்கம் வைகாசி பொறந்தாலே சாரக்கட்டிரும் என்று சொல்லுவார்கள். அந்த அளவுக்கு சாரல் மழை என்பது மக்களோடு கலந்து ஒரு உணர்வு. இந்த மழை என்ன தான் மொத்த இந்தியாவுக்கும் பெய்தாலும் தமிழ்நாட்டில் கால்குளம் நிரம்பக் கூட காணாது. அவ்வளவே தான் பெய்கிறது. நமக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை பெய்யும் வடகிழக்கு பருவக்காற்று காலத்தில் தான் என்றாலும் இந்த இருபருவத்திலுமே மழை பெறும் பகுதிகளும் இருக்கின்றன!
அத்தகைய பகுதிகளில் ஒன்று தான் நெல்லை மாவட்டத்தின் மேற்கு மலையை ஒட்டிய பகுதிகள், கன்னியாகுமரி, நீலகிரி மாவட்டத்தில் சில பகுதிகள், வால்பாறை, பாலக்காடு மற்றும் ஆரியங்காவு, திருவனந்தபுரம் பகுதிகள்.
அதிலும் குறிப்பாக நெல்லை மாவட்டத்தில் இந்த தென்மேற்கு பருவக்காற்று காலத்தில் பொதிகை மலையிலிருந்து வரும் குளிர்ந்த தென்றலோடு சாரல் மழையாய்பீ பொழிந்து பூமியை நனையவைக்கிறது. எல்லா ஊருலயும் பெய்த மழை மாதிரி தானேப்பா? இதிலே என்ன விசேடம் இருக்கு என்று கேட்டீர்களென்றால் அங்கே தான் விசயமே இருக்கிறது!
சாரல் மழைக்காலங்களில் இங்கே வீசும் காற்று ஜப்பான் வரையிலும் பருவமழையைத் தீர்மானிக்கிறதாம். ஜப்பானிலிருந்து ஆராய்ச்சியாளர்கள் வந்து எங்கள் பள்ளிக்கூடத்து மேக்க இருந்த பரம்பு முழுவதும் மரம் நட்டு விட்டு சென்றனர். அப்போது தான் இந்த தகவலும் கிடைத்தது. இது விஞ்ஞான ரீதியாக இருப்பதால் நமக்கு விளங்குவதில்லை, விடுங்கள்!
பொதுசனப் பார்வையில் நெல்லை மாவட்டத்தில் தான் இந்தக் காற்றையும் மழையையும் ரசிக்க முடியும். ஏனென்றால் இங்கே அது அழுத்தாத வகையிலீ பெய்கிறது, அடிக்கிறது. கன்னியாகுமரியிலும் இதே மழை பெய்தாலும் வலுத்துப் பெய்யும், கோவை வட்டாரங்களிலும் இதே சாரல் பெய்தாலும் அங்கே குளிர் அதிகமாகி காற்றை ரசிக்க விடாது! ஆக, நெல்லை மாவட்டத்து பொதிகைச்சாரலில் தான் அந்த சுகாநுபவம் கிட்டுகிறது என்ற உண்மையை உணர்ந்தே ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் மக்கள் குற்றால அருவிகள், குண்டாறு, மணிமுத்தாறு மற்றும் அகஸ்தியர் அருவிகளில் குளிக்க லட்சக்கணக்கான மக்கள் குழுமுகிறார்கள். நாங்கள் சொல்ல வருவது ஒன்று தான்: யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பதோடு எங்கள் மாவட்டத்தைச் சுற்றுப்பாருங்கள், குப்பைத்தொட்டியாக்கிவிடாதீர்கள். பொறுப்புணர்வோடு அருவிகளில் குளித்து இன்புற்றுச் செல்லுங்கள்.
Comments
Post a Comment