ஊடலும் ஊடல் நிமித்தமும்

ஊடலும் ஊடல் நிமித்தமும் .....

    சங்க காலத்தில் இருந்த ஐவகை நிலப் பாகுபாட்டில் மருத நிலத்தின் உரிப்பொருள் "ஊடலும் ஊடல் நிமித்தமும் ".  தற்போதும் வழக்கத்தில் இருக்கும் ஒரு சடங்காக  இல்லையெனில் திருவிழாவின் ஒரு அங்கமாக இன்றும் இந்த உரிப்பொருளை நினைவு படுத்தும் வகையில்  ஒரு நிகழ்வை நான் கண்டதும் அதைப் பற்றி எழுத வேண்டுமென்று தோன்றியது ...அதனால் ..

    ஊடல் என்பது பிணக்கிக்கொள்ளும்  ஒருவகை நடத்தைப்  பாங்கு .இது உளவியல் அடிப்படையில் தோன்றுகிறது. மேலைநாட்டு நடத்தை அறிவியல் இதனைப் பல்வேறு கோணங்களில் பகுத்தாய்கிறது.நடத்தையியல் மேலைநாடுகளில் 19 ஆம் நூற்றாண்டில் உருவானது. தமிழில் இந்த அறிவு கிறித்துவுக்கு முன்பே தோன்றி வளர்ந்துள்ளது.தொல்காப்பியர் இதனை மெய்ப்பாட்டியல் என்னும் தலைப்பின் கீழ் விளக்கியுள்ளார்.
உடலுறவு வாழ்க்கையில் ஊடல் இன்பம் தரும். எப்போது எனில் அந்த ஊடுதல் கூடித் தழுவுவதில் முடியவேண்டும்.



 திருக்குறள்  - 'ஊடல்' பாங்கினை துனி, புலவி என்னும் சொற்களால் வேறுபடுத்திக் காட்டுகிறது. இதன் வழியே பார்க்கும்போது துனி என்பது ஊடலின் உச்சக்கட்டம். கனிந்த பழம் போன்றது. துன் என்னும் அடிச்சொல் துன்னி அதாவது நெருங்கி இருப்பதைக் குறிக்கும்.பழுத்திருக்கும் ஊடலும் கூடலில் இன்பமாக அமைந்திருக்கும். பொய்யை இட்டுக்கட்டிக்கொண்டு ஊடும் பாங்கு புலவி எனப்படும். இது பழுக்காமல் பிஞ்சு நிலையில் இருக்கும் கருக்காய் போன்றது. அதாவது ஊடலின் தோன்று நிலையே புலவி.

ஆண் ஊடுதல்
         திருமணத்துக்குப் பின்னர் கூடி வாழும்போது மனைவி தன் ஆவலைத் தணிக்காதபோது கணவன் ஊடுவான். களவு வாழ்க்கையின்போது இருவரும் கூடுவதற்குக் காதலி குற்றிட்ட இடத்துக்கு அவள் வரத் தவறியபோது காதலன் ஊடுவான். இந்த ஊடல் புலவி என்னும் போலிப் பிணக்காகவும் இருக்கும். அப்போதெல்லாம் தலைவியின் தோழி பக்குவமாக எடுத்துரைத்து அவர்களைக் கூட்டிவைப்பாள்.

பெண் ஊடுதல் 
      திருக்குறளில் பெண் ஊடுதல் பற்றிய செய்திகள் திருக்குறளின் கடைசியில் உள்ள புலவி, புலவி நுணுக்கம், ஊடல் உவகை என்னும் மூன்று அதிகாரங்கள் காம உணர்வை மிகுதிப்படுத்திக் கூடல்-இன்பத்தை இனிமையாக்கும் ஊடல் பற்றிய செய்திகளைக் கூறுகின்றன.

புலவி
              புலவியைத் திருவள்ளுவர் புலத்தை என்னும் சொல்லாலும் குறிப்பிடுகிறார். அத் கணவன் தழுவ வரும்போது தழுவாமல் இருப்பதாகும்.புலந்து உணர்தல் புலவி. இது பொய்யாகக் கணவன்மேல் சினம் கொள்ளுதல் ஆகும்.

      ஊடல் உரிப்பொருளை மெய்ப்பிக்கும் வகையில் இன்றும் பெரும்பாலான ஆகம வழி நடவும்  சைவக்கோவில்களில் (எனக்கு வைனவக் கோவில்களைப்  பற்றித் தெரியவில்லை)  பெருந்திருவிழாவின்  ( பிரம்மோற்சவம் )   ஐந்தாம் திருவிழாவின் போது சுவாமியான சிவபெருமானுக்கும் இறைவியான அம்பிகைக்கும்  இடையே ஊடல் நடைபெறுவதைப் போல சுவாரசியமான ஒரு நிகழ்வு தொல்  தமிழ் மரபின் நீட்ச்சியாக இன்றும் நடைபெறுகிறது - இது அன்றைய தமிழர்கள் தங்களிடையே என்னவெல்லாம் உண்டோ அதையெல்லாம் இறைவனிடமும் பொருத்திப்பார்த்து ரசித்திருக்கிறார்கள்.... என்பதற்கு சாட்ச்சியாக நடைபெறுகிறது. இதுவும் எதனை நாட்களுக்கு நீடிக்குமோ ?? எங்கள் ஊர் சங்கரலிங்க சுவாமி கோவிலில் இன்றும் நடைபெறுகிறது இந்நிழகழ்வு. 
        
     இந்நிகழ்வில் சுவாமி மீது அம்மாள் கோபித்துக் கொண்டு கோவிலின் உள்ளே சென்று கதவடைத்துக் கொள்ள சுவாமி தன்னுடைய சொத்துக்களை எல்லாம் அம்மாளுக்கு எழுதி வைத்துக் கொடுத்த பின்னர் ஒன்ற சேர்ந்து கொள்வது ஒரு நிகழ்வாக நிகழ்த்தப்படுகிறது.


கோவில் இராஜகோபுர வாயில் வழியாக ஐயன் வெளியே சென்று விட அம்மை கோவிலின் உள்ளேயே இருக்க கோவில் கதவு சார்த்தப்படுகின்றது. ஓதுவார் மூர்த்திகள் அம்மைக்கும் ஐயனுக்கும் நடைபெறும் உரையாடலை இவ்வாறு ஓதுகின்றார்.

அம்பாள் : தூர நில்லும் எந்தன் சுவாமி ! ஏன் இந்த தாமதம்?
ஐயன்: நாரிமயே! திருவாலங்காட்டில் நான் அந்த பத்ர காளி முன் நாட்டியம் ஆடி வந்தேன் மானே! தேனே!
அம்பாள்: மாதவரே! மன்னவரே! கங்கைதனை தலைக் கொண்டவரே! உமதிருகண்ணும் சிவந்ததென்னே சொல்லும் சுவாமி?
ஐயன்: நாயகியே! நான்முகியே! எந்தன் நல்ல இடம் கொண்டவளே! தத்தையார் கந்தப்பொடி கண்ணில் விழ சிவப்பாச்சே மானே!
அம்பாள்: மான் மழு கொண்டவரே! மதியினை அணிந்தவரே! மன்னவரே நின் புஜத்தில் மஞ்சளின் நிறம், சுவாமி உமக்கு மஞ்சளின் நிறமேது?
ஐயன்: சந்தனத்தில் கலாப கஸ்தூரி கலந்து தெளித்ததால் மஞ்சளாச்சே மானே! தேனே!
அம்பாள்: பொன்னார் மேனியரே! புலித்தோலை அணிந்தவரே! மெய்குறி காங்குது, மேல் மூச்சு வாங்குது இந்த விசித்திரம் என்ன சொல்லும் சுவாமி?
ஐயன்: பஸ்மாசுரனை எதிர்த்து போர் புரிந்த போது பட்டன இக்குறிகள் மானே! தேனே!
அம்பாள்: நடந்து வந்த காரணம் என்ன சொல்லும் சுவாமி?
ஐயன்: வெண்கவரி மான் மீதிருந்து தவறி விழுந்ததனால் நானே நடந்து வந்தேன் மானே! தேனே!
அம்பாள்: எந்தன் மனம் நோகுதய்யா! சஞ்சலம் தோன்றுதைய்யா! உமக்கு இதழ் குறி வந்தது ஏன் சுவாமி?
ஐயன்: தாருகாவனத்து தத்தையார் பச்சைக்கிளி முத்தமிட ஆனதடி என் மானே! தேனே!
அம்பாள்: என் உடல் பாதி கொண்டவரே நீரும் நானும் சேர்ந்த மனமல்லவே! நாம் சேர்ந்திருப்போம் நானே வாரேன் சுவாமி.

பின் கோவில் கதவுகள் திறக்கப்படுகின்றன அம்மை வந்து ஐயனுடன் சேர்ந்து காட்சி தர கற்பூரம் காட்டப்படுகின்றது

  

Comments

Popular posts from this blog

தண்பொருநை தொடர் -1

முகைத்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல்