வண்டிமறித்தம்மன் கோவில் கொடை

வண்டிமறிச்சம்மன் கோவில் கொடை!

பல விதமான தெய்வங்களைக் கொண்டது எங்கள் நெல்லை மாவட்டம். ஊர் பெயர்களை விட தெய்வங்களின் பெயர்கள் அதிகம்! ஊருக்கு நாலு பெயர் கொண்ட தெய்வம். ஒவ்வொன்றிற்கும் ஓர் கர்ண பரம்பரைக் கதை. அப்படியாக எனக்கு அறிமுகமான பிரம்மாண்ட தெய்வம் தான் அம்பாசமுத்திரம் வண்டிமறித்த அம்மன் - பிரம்மாண்டம் என்றால் எதோ தஞ்சை பெரிய கோவில் போல எண்ணக்கூடாது; உருவத்தில் நான் பார்த்த முதல் பெரிய தெய்வம். அம்மன் என்று பொதுவில் அழைக்கப்பட்டாலும் ஒரு அம்மாளும் ஒரு சாமியுமாக இருவருடைய நிலையம் தான் அது. பல நாட்கள் மண் மேடாக கிடந்த இடத்தில் ஒரு அரையாண்டு தேர்வு விடுமுறைக்கு அம்பைக்கு சென்ற போது ஓலைத் தட்டி வைத்து மறைக்கப்பட்டு வேலை நடந்து கொண்டிருந்தது. ஆச்சியிடம் கேட்டதற்கு 'இந்த வருசம் வண்டி மறிச்சம்மங்கோயில் கொடை உண்டுலா அதுதான் வேளார் வந்து அம்மாளைச் செய்தாரு. அந்த அம்மா நான் வெயில்லயும் மழையிலயும் கிடக்கனும், ஒவ்வொரு கொடைக்கும் என் நிலையத்தை திருப்பிச் செய்யனும்னு சொன்னுச்சாம்' என்றாள். எப்படி மண் உருவம் செய்து கோவிலில் நேர்ந்து விடுவார்களோ அதேபோல அந்த வண்டி மறிச்சம்மன் மண் மேடு என்பதிலிருந்து தெய்வமாக பையப் பைய உருமாறிக் கொண்டு இருந்தது. விவரம் தெரிய ஆரம்பித்த அந்த வயதில் ஆச்சி சொன்ன இந்த விசயமும் அம்மா உண்டாக்கிய கொழுக்கொட்டை ஆசையும் தை மாதக் கொடைக்கு வரவேண்டும் என்கிற ஆர்வத்தை உண்டாக்கி விட்டிருந்தது. எப்படியும் பள்ளிக்கொடத்துக்கு லீவு போட அம்மை விட மாட்டாள் என்பதால் அப்பாவிடம் சொல்லி அடம்பிடித்து சாயந்தரமாக கிளம்பி காலைல முதல் வண்டிக்கு வந்து விடுவதாகத் திட்டம். வருடமோ வயதோ சரியாக நினைவில்லை. சாயந்தரம் கிருஷ்ணவேணி வண்டிக்கு வந்து இறங்கிய போது ஊரே மேளச்சத்தத்துடனும், வேட்டுச் சத்தத்துடனும் இருந்தது. வீட்டு வாசல்களில் பொங்கல் வைத்து இறக்கிக் கொண்டு இருந்தார்கள். ஆச்சியும் பொங்கல் வைத்து இறக்கிவிட்டு கொழுக்கட்டை அவிக்க மாவு கிளறிக் கொண்டு இருந்தாள். 'என்ன அய்யா இப்ப தான் வாறீய முன்னமே வந்திருக்கலாம் லா' என்றாள் ஆச்சி. 
இரவு 9 க்கு மேலாக கோவிலுக்கு அழைத்துச் சென்றாள். அந்த மண்மேடு பிரம்மாண்ட ஆண் பெண் ரூபம் கொண்டு வீரப்பல்லும் விரிசடையுமாகப் படுத்துக் கிடந்தது. சாயந்தரம் அம்மாளுக்கு ஆறு மணிக்கு கண் திறந்தார்கள் என்றார்கள். அந்தப் பெரிய கண்கள் பார்க்கவே பயங்கரமாக இருந்தது. அம்மாளைச் சுற்றி உயர மூடு மூடாக வாழைத்தார்களும் அதன் மேல வரிசையாக பல டியூப்லைட்டுகளும் போட்டிருந்தார்கள். அந்த வெக்கையிலேயே தார் பழுத்து விடுமாம். அம்பாரமாக மாலை கட்டிக் குவிந்து கொண்டு இருந்தது. மணி 9 தாண்டவும் மேளக்காரர்களும் தயாராக மேளந் தட்ட தொடங்கி இருந்தார்கள். செத்த நேரத்தில் குடமாடி இருவரும் அம்மாள் முன் இருந்த கரகக்குடம் எடுத்து ஆடத் தொடங்கினர். சப்பரத்தில் அம்மாள் உருவமும் தயாராகி இருந்தது. அவ்வளவு பெரிய குடம் - 15 கிலோ எடை இருக்கும். வெண்கல குடம் அதனுள்ளே ஆத்துத் தண்ணீ, மேல வகை வகையாக மாலைகள் வேப்பிலை கோர்த்து செய்யப்பட்டிருந்த அலங்காரம். எனக்கெல்லாம்  ஆச்சர்யமாக இருக்கும் இவ்வளவு எடையைத் தூக்கி எப்படி கை வைக்காம ஆடுதாங்கனு அதுவும் அந்த வயசுல அப்படின்னு.  அப்படி அந்த ஒரு இரவு முழுக்க கரகக் குடம் தூக்கி தெருவுக்கு தெரு ஆடனும். 18 தெருவும் சுத்தி மேக்க மணி முதலியார் வீட்டுக்கு போயிட்டு சப்பரம் கோவிலுக்கு காலைல 5 மணிக்கு வந்து நிக்கும் னு ஆச்சி சொல்லுவா. கொடை பாக்க போனாலும் காலைல ஆவுத படப்பு தீபாராதனை பாக்க முடியாது. முதல் பஸ்ஸூ 5 மணிக்கு அதுல ஏத்தி விட்டுருவாரு தாத்தா. பல ஆண்டுகளுக்கு பிறகு கல்லூரி படிக்கும் காலத்தில் தான் படப்பு பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. இரவு முழுவதும் ஆக்கித் தட்டிய சோற்றை அம்பாரமாக குவித்து அதன் மேல சாம்பார் அவியல் கொழக்கட்டை அப்பளம் முட்டை என படைப்பு போட்டிருப்பார்கள். இதிலே தெரு முக்கு இலங்கத்தம்மனுக்கு மட்டும் முட்டை கிடையாது. பல ஆண்டுகளுக்கு முன்பு அசைவ படப்பு ஆக இருந்தது பின்பு சைவம் ஆக்கப்பட்டு வண்டி மறிச்சானையும் சைவமாக்கி விட்டு விட்டார்கள். கொடை முடிந்து தரும் படப்புச் சோறும், கொழுக்கட்டைக்கும் உள்ள ருசி உண்மையிலேயே நாவில் எச்சில் ஊற வைப்பது. வீட்டிலே வைத்த பொங்கலையும் அம்மாளுக்கு படைப்பு ஆன பிறகே திறப்பார்கள் என்பதால் அந்த நாளன்று பல வீடுகளில் ஆட்டுக்கறியோ கோழிக்கறியோ தான். அத்தோடு கொடையும் முடிந்தது. 

மண்ணாக இருந்த தெய்வம் பின்னாளில் உருவம் செய்ர வேளார் இல்லாதபடியால் சிமெண்டு போடப்பட்டு சுதை ஆனது. காம்பவுண்டு சுவர் கட்டப்பட்டு கதவும் போடப்பட்டது.

இரண்டு மூன்று கொடைக்கு முன்பு இருந்த ஆச்சிமார்களில் ஒருத்தியும் இன்று இல்லை. வந்தால் வாயார கேட்கவும் யாருமில்லை அம்பையில்! 

இரண்டு கொடைக்கு முன்பு உலகாச்சி ஆச்சி சொன்னாள் 'அப்ப உள்ள ஆளு லாம் போயிட்டுவதுவோ ஆஞ்சொன்னாப்ல இனிமே யாரு எடுத்துச் செய்வாவோ? நம்ம காலம் முடிஞ்சாச்சு. இனிமே கொடை லாம் பாக்க முடியுமோ என்னமோ என்று?' 

ஆச்சி இன்று உயிரோடு இல்லை. கொடை மட்டும் நடந்து கொண்டு இருக்கிறது.

இந்த வருடமும் வண்டி மறிச்சானுக்கு கொடை நடந்தது. கடந்த கொடை வாட்சப் வீடியோ காலில்... இந்த வருடம் அதுவுமில்லை... ஆனால் முகநூல் காணொயில் முடிந்து விட்டது! இனி அடுத்த கொடை எங்கேயோ!

குறிப்பு: மதுரை வட்டாரத்தில் முத்தாளையம்மன் என்று ஒரு தெய்வம் உண்டு அன்னு பிறந்து அன்னு அழியும் தெய்வும் அதாவது காலையில் உருவம் செய்யப்பட்டு இரவில் கரைக்கப்படும் அல்லது உடைக்கப்படும். இதே போல எண்ணற்ற தெய்வங்கள். இவை எல்லாம் எந்த விதமான ஆகம விதிகளுக்கும் உட்படாதவை என்னையோ உங்களையோ வராதே தொடாதே என்று சொல்லாதவை. இத்தகைய பல தெய்வங்களுக்கான நிலையங்களே இன்று சமக்கிருதமயமாகிக் கொண்டு இருக்கின்றன. பல தெய்வங்கள் வழிபட ஆள் இல்லாது அழிந்து போய்விட்டன. இவை எல்லாம் ஏதோ ஒரு வகையில் நமது முன்னோரோ அல்லது நம்மைப் போல இருந்து இறந்தவர்களே. இத்தகைய தெயவங்களைப் பற்றி விரிவாக பலர் எழுதி இருந்தாலும் அய்யா பேராசிரியர் தொ. பரமசிவன் அவர்களும், ஆ சிவசுப்பிரமணியன் அவர்களும் விரிவான ஆராய்ச்சி செய்து உள்ளனர். 

கொடை- என்றால் நெல்லை மாவட்டத்துச் சிறு தெய்வக் கோவில்களில் நடக்கும் திருவிழா.

நேற்று கொடையின் போது!

இதற்கு பிறகு மண் உருவம் இல்லை. இது தான் கடைசியான மண் உருவம்.

மேற்கூரை போடப்பட்ட பின்பு

Comments

Popular posts from this blog

ஊடலும் ஊடல் நிமித்தமும்

தண்பொருநை தொடர் -1

முகைத்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல்