தீபாவளி - தமிழர் விழாவா?
தீபாவளி - திராவிட பாரம்பரியத்தில் வந்தவர்களுக்கும் பகுத்தறிவாளர்களுக்கும் என்றுமே சர்ச்சைக்குரிய ஒரு விழா ஆகும். இந்த பண்டிகை குறித்து பல கதைகள் சொல்லப்பட்டாலும் அது எதற்குமான உறுதியான சான்றுகள் என்பது இதுவரை கிடைக்கப் பெறவில்லை. இந்து என்று சொல்லப்படக்கூடிய மதத்தின் பல பிரிவுகளை சேர்ந்த மக்களும் சமண மதத்தைச் சார்ந்தவர்களும் இதை கொண்டாடுகின்றனர். அத்தோடு சில இடங்களில் தீபாவளிக்கு முன்பு பின்பு வேறு சில பூஜைகள் போன்ற விழாக்களும் சேர்ந்து கொள்கின்ற காரணத்தினால் நம் நாட்டின் பெரிய திருவிழாவாக அடையாளம் காணப்படுகிறது. நாடு முழுமைக்கும் கொண்டாடப்படுவதாக தீபாவளி சொல்லப்பட்டாலும் அது உண்மையில் வட இந்திய பண்டிகையே!
பல்வேறு நாடுகளில் தீபம் ஏற்றும் பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. இந்தியாவிலும் அதே போன்ற தீபம் ஏற்றக்கூடிய பண்டிகை தான் தீபாவளி; ஆனால் அது வட இந்தியாவில். மேலும் ஒரு தீபம் ஏற்றும் பண்டிகை தென்னிந்தியாவில் கொண்டாடப்படுகிறது - அது திருக்கார்த்திகை தினத்தில்! தமிழகம், கேரளம், ஆந்திரம், தென் கர்நாடகம் மற்றும் ஒடிசாவில் திருக்கார்த்திகை அன்று தீபம் ஏற்றப்படுகிறது. வடகர்நாடகத்திலும் மற்ற இந்திய நகரங்களிலும் தீபாவளி உண்மையான தீப ஒளி பண்டிகையாகும்.
நான் ஜார்கண்டில் பணிபுரிந்த போது கிழக்கு இந்தியாவில் என்னென்ன விழாக்கள் கொண்டாடப்படுகின்றன என்ன மாதிரியான சூழல் அங்கு நிலவுகிறது என்பதை குறித்து அறியும் வாய்ப்பு கிட்டியது. கிழக்கு இந்தியா என்று சொன்னால் மேற்குவங்கம், ஒடிசா, ஜார்கண்டின் பகுதி, பிகாரின் ஒரு பகுதி, அசாம் போன்ற இந்த பகுதிகளின் பிரதான விழாவாக இருப்பது துர்கா பூஜா எனப்படும் தசரா பண்டிகையே! அவர்களுக்கு தீபாவளி பத்தோடு ஒன்று பதினொன்றாக உள்ள பண்டிகை தான். பின்பு யாருக்கு இது மிகப்பெரிய பண்டிகையாக இருக்கிறது என்கிற கேள்வி உங்களுக்கு எழும்!
மராட்டியம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், உ.பி. மற்றும் ஹரியானா போன்ற மேற்கு மற்றும் வடக்கு இந்திய பகுதிகளின் ஆகப்பெரும் பண்டிகையாக தீபாவளி இருக்கிறது. இங்கே சமண மதத்தைச் சேர்ந்தவர்கள் கணிசமான அளவில் இருக்கிறார்கள். மேலும் இந்தப் பகுதியின் பண்பாட்டில் சமண மதத்தின் தாக்கமும் அதிகம். வர்த்தமான மகாவீரர் வீடுபேறு அடைந்தது தீபாவளி அன்றே! அதன் நிமித்தமாகவே தீபாவளியின் முக்கியத்துவம் வருகிறது. தீபாவளியை ஒட்டி குஜராத்தி ஆண்டு பிறப்பும் நிகழ்வதால் குஜராத்தில் இது ஒரு வார பண்டிகையாக மாறிவிடுகிறது.
சரி இது எல்லாம் வட இந்தியாவின் நிலைமை தென்னிந்தியாவில் என்ன? தமிழகத்தில் என்ன? என்பது தானே உங்கள் கேள்வியாக இருக்கும்! ஆம், அதற்கு தான் வருகிறேன். எங்கள் ஊரில் இருந்து 100 கிலோ மீட்டர் சென்றால் கேரளாவின் புனலூர் வந்துவிடும். இந்த அதிகபட்சமான 100 கிலோமீட்டர் தொலைவிற்கு உள்ளாகவே தீபாவளி என்பது ஒரு முக்கியத்துவம் வாய்ந்த பண்டிகை என்பதிலிருந்து சாதாரண ஒரு நாளாகி விடுகிறது. ஏனென்றால் தீபாவளி கேரளாவில் பெரிய அளவில் கொண்டாடப்படுவதே இல்லை. அங்கு பள்ளிகள் கூட சில இடங்களில் நடக்கும் என நண்பர்கள் சொல்லி இருக்கிறார்கள். தொலைக்காட்சிகளில் சிறப்பு நிகழ்ச்சிகள் கூட ஒளிபரப்பப்படுவது இல்லை. ஏன் என்கிற கேள்வி எழலாம் இல்லையா? இவர்கள் சொல்வது போன்றே குருவாயூர் உன்னிகிருஷ்ணனை வணங்குபவர்கள் தீபாவளி கொண்டாடாமல் இருப்பார்களா? அப்படி இருந்தால் அந்த கிருஷ்ணனும் இந்த கிருஷ்ணனும் வேறா? கொஞ்சம் சிந்தியுங்கள் மக்களே! கேரளா எந்த வடநாட்டு மன்னர்களாலும் ஆளப்படவில்லை! விசயநகரப் பேரரசின் பகுதியாகவும் இருந்தது இல்லை.
தமிழகத்தில் 16 ஆம் நூற்றாண்டுக்கு பிறகு ஏற்பட்ட நாயக்கர் & மராட்டிய மன்னர்களின் ஆட்சியின் காரணமாகவே தமிழ்நாட்டிற்கு வட இந்திய பண்டிகைகள் பலகாரங்கள் இறக்குமதி ஆனது. அதுவும் குறிப்பாக விஜயநகர பேரரசின் ஆட்சி காலத்தில் இங்கே நாயக்கரின் ஆட்சி மேலெழுந்த காலத்தில் தான் தெலுங்கு பேசும் பல்வேறு சாதிகளை சேர்ந்த மக்களின் இடப்பெயர்வும் அவர்களின் பண்பாட்டு பெயர்வும் நடைபெற்றது. இத்தனை விதமான இனிப்புகள் தமிழகத்தில் இருந்தது இல்லை; இத்தனை விதமான எண்ணெயில் சுடும் பலகாரம் தமிழகத்தில் யாருமே சாப்பிட்டது இல்லை 16-ஆம் நூற்றாண்டு வரை! அது அத்தனையுமே இறக்குமதி செய்யப்பட்டது தான். அப்படித்தான் தீபாவளியும்.
என்னதான் தீபாவளி தமிழகத்தில் நுழைய முற்பட்டாலும் அல்லது நுழைந்து விட்டாலும், நமது தீபாவளி வட இந்திய பண்டிகையிலிருந்து முற்றிலும் வேறுபட்டது என்பதற்கு நாம் வழிபடும் முறைகளை நமது சடங்குகளை சான்று. வடக்கே தீபாவளி அன்று சைவச் சாப்பாடு தான். இங்கோ மட்டன் இல்லாத தீபாவளியா என்கிற கதை தான். அங்கே லட்சுமிக்கு பூசை செய்கிறார்கள். ஆனால் இங்கே நீத்தாருக்கு! எங்கள் வீட்டை உதாரணமாக எடுத்துக் கொள்கிறேன். தீபாவளி அன்று ஒருநாளும் எந்த கடவுளர்க்கும் எங்கள் பெரிய வீட்டில் பூஜை செய்யப்பட்டது இல்லை. மாறாக மறைந்த முன்னோர்களுக்கு தெற்கு சுவரில் துணிமணிகளை வைத்து பலகாரம், பண்டங்களை வைத்து பூஜை செய்து அனைவருக்கும் தருவர். அவ்வளவுதான் காலையில் அரை மணி நேர சடங்கோடு முடிந்துவிடும். மாலையில் வேண்டுவோர் வேட்டு போடுவார்கள்! இல்லையெனில் சும்மா இருப்பார்கள். ஒரு இடைநிலை சாதியாக இருக்கும் எங்களிடத்திலேயே இந்த தீபாவளியால் தாக்கத்தை உண்டாக்க முடியவில்லை எனில் கீழ் நிலையில் இருக்கும் சாதியாரிடத்தில் தீபாவளி என்பது எந்த விதமான சடங்கு சம்பிரதாயங்களையும் எப்படி ஏற்படுத்தியிருக்க முடியும் இல்லையா? அதுவுமல்லாமல் தமிழகத்து உழவர் பெருமக்கள் விழாக் கொண்டாட இது தருணமே அல்ல. தமிழகத்தை பொறுத்தவரையில் அது நீத்தார் நினைவிற்கான ஒரு நாளாகவே பெரிய அளவில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. மேலும் பேராசிரியர் தொ.ப. வின் எழுத்துக்களை படிக்கும் போது உங்களது தீபாவளி பற்றிய நல்ல தெளிவு கிட்டும்.
மேலும் இப்போது தீபாவளி அன்று வேட்டு போடுவது எங்களது பாரம்பரியம் என்றெல்லாம் உருட்டுவதை பார்க்கலாம். ஓரிரு இடங்களில் மிகச்சிறிய அளவில் இருந்த வெடி தயாரிப்பை பெரிய அளவில் அறிமுகப்படுத்தி சிவகாசியை பெயர் வாங்கச் செய்ததே அய்ய நாடாரும், சண்முக நாடாரும் தான். அது நடந்தது 1945 காலகட்டத்தில். வறண்ட விருதுநகர் மாவட்டத்துக்கு அன்றைய தேதியிலும் சரி இப்போதும் சரி வேலைவாய்ப்பு உண்டானது தீப்பெட்டி, அச்சு, வெடித் தயாரிப்பு போன்ற தொழில்களால் தான். அவர்கள் தீபாவளியை மையப்படுத்தி வெடித்தயாரிப்பை பெருக்கினர். வெடி எல்லோரது இல்லத்திலும் தீபாவளியன்று நுழையத் தொடங்கியது. அவ்வளவு தான் இந்த வேட்டுப் போடுதலும்.
பண்டிகைகள் அந்தந்த மண்ணின் பண்பாடு, நிலவியல் சார்ந்ததே! ஓணமும் பொங்கலும் இந்த மண் முகிழ்ந்த கொண்டாட்டங்கள். மேற்கு மலையின் மேற்கே ஓணமும் கிழக்கே பொங்கலும் கொண்டாடப்படுவது காலநிலை நிலவியலோடு ஒன்றிணைந்தது. இன்றைக்கு ஹோலி கூட தமிழகத்தில் மெல்ல நுழைகிறது. அனைத்தும் வணிகமான இப்பொழுது நுகர்வுப் பண்பாட்டின் காரணமாகவும் இந்த மாதிரியான விழாக்கள் முக்கியத்துவம் கொடுத்து ஊக்குவிக்கப்படுகின்றன! வருடம் பூராவும் ஏதாவது வந்து கொண்டே தான் இருக்கும். அதற்காக நாமும் அதை எல்லாம் கொண்டாடிக்கொண்டு இருக்க முடியாது.
மேலும் தீபாவளி வடநாட்டில் குளிரை வரவேற்பது போன்ற ஒன்று. அடுத்த நான்கு மாதங்கள் பனிக்காலம். பனி முடிந்து வரும் ஹோலியும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அது வசந்தத்தை வரவேற்கும் விழா! நமக்கு ஏது வசந்தம்? இலையுதிர் காலம்? கடும்பனிக் காலம்? தமிழகம் வெப்பவலய நாடு! இங்கே அதிகமான காலநிலை மாறுபாடு கிடையாது. தமிழ்நாட்டில் நிலவும் சிறு குளிர் காலத்தையும், கார்த்திகை அன்று விளக்கேற்றி மழைக்கு விடையாற்றி கொண்டாடி இருக்கின்றனர். அன்று தொட்டு இன்று வரை தமிழ்நாட்டில் கார்த்திகை அன்றே விளக்கேற்றுதல் நடக்கிறது. தீபாவளி அன்று அல்ல. தீபாவளி என்கிற பெயரே தமிழல்ல எனும் போது அது எங்ஙனம் இந்த மண்ணின் விழா என்போம்?
சரி அதற்காக கொண்டாடாமல் இருந்து விடலாமா முற்றிலும் புறக்கணித்து விடலாமா என்பதுதான் உங்களது அடுத்த கேள்வியாக இருக்கும். அந்த விஷயத்தில் நான் தலையிட போகுது இல்லை. ஒரு பகுத்தறிவாளனுக்கு தான் செய்யும் விஷயங்களை பற்றி தெளிவு இருக்கும். ஏன் எதற்கு எப்படி என்கிற கேள்விகளை அவன் தொடர்ந்து எழுப்பி கொண்டு தான் இருப்பான். காரண காரியமே இல்லாமல் ஏதோ ஒன்றை ஏதோ ஒரு புராண ஆபாச கதையின் சான்றாக உண்டான அவனது மனம் ஒப்பாது. எனக்கு இப்படித்தான் உங்களுக்கு எப்படியோ!!
படம்: சென்னையில் தீபாவளி வாணவேடிக்கை
Comments
Post a Comment