கைத்தறி தினம்'22

ஒரு பத்தாண்டுகளுக்கு முன்பு! தெங்காசி யானைப்பாலம் அருகிலுள்ள ஒரு உணவகம்; 
சாப்பிட உக்கார்ந்திருந்தோம். இட்டிலி, தோசையும் வைத்து விட்டு பேச்சு கொடுத்தார் உரிமையாளர். அவாள் சைவாள். 
'எந்த ஊரு?' என்றார். 
'சங்கரன்கோவில்' என்று சொல்லவும் சற்று மேலும் கீழூம் பார்த்து விட்டு 'பசைக்கஞ்சி'யா? என்றார். 
புரிந்திருக்கும் அவர் என்ன நோக்கில் இதைக் கேட்டிருப்பார் என்று! எங்கய்யா கைத்தறி கதர் வேட்டி தான் உடுத்தியிருந்தார்.  
சற்றும் தாமதிக்காமல் 'ஆமாய்யா நீரு கட்டிருக்கீருல்லா வேட்டி அதுவும் இந்த பசைக்கஞ்சி நெஞ்சது தான்!' என்றார் எங்க அய்யா. 
அவாள் வாயடைத்துப் போய்ட்டார். பிறகு ஒன்றும் சொல்லவில்லை! 

இதை ஏன் சொல்ல வந்தேன் என்றால் இங்கே உடுத்தும் உடைகளை வைத்தே அவர்களை இன்ன சாதி என்று பேதம் பார்ப்பது தொடர்கிறது. வெள்ளை வேட்டி உடுத்துவோர் உயர்ந்த சாதிக்காரர்களாகவும் கலர் வேட்டி உடுத்துவோர் தாழ்ந்தவர்களாகவும் எண்ணுவது இன்னும் தொடங்குகிறது! 

இருந்தாலும் நம்மை ஏன் நாம் தாழ்த்திக்கொள்ள வேணும். நமக்கு பிடித்ததை உடுத்துவோம். கலர் இல்லையென்றாலும் வெள்ளை வேட்டியாவது உடுத்துவோம்!

மேலும் கைத்தறி, விசைத்தறி என்று ஸ்டேட்டஸ் போடுபவர்கள் யாரும் அந்த துணிகளை வாங்கப் போவதில்லை என்பது திண்ணம். சொல்லப்போனால் நெசவாளர்களும் இதை விட்டு வெளியே வரத்தான் நினைக்கிறார்களே ஒழிய அத்தொழிலில் நீடிக்க விரும்பவில்லை என்பதே உண்மை. 
எங்க அய்யா உடுத்திக்கொண்டிருந்த கைத்தறி கதர் வேட்டி நெய்பவர் இறந்து போன பிறகு இன்று அந்த வேட்டி நெய்வதற்கு ஆளில்லை! புளியங்குடி, சங்கரன்கோவில், அம்பாசமுத்திரம், கல்லிடை, நாகர்கோவில் வடசேரி வரை சென்றும் பார்த்தாகிவிட்டது. வேட்டி நெய்வதற்கு ஆளில்லை! அந்த வேட்டி இனிமேல் கிட்டாது என்பது எனக்கான பிரச்சினை மட்டும் இல்லை! ஒரு பாரம்பரியத்தின் இழப்பு!

Comments

Popular posts from this blog

ஊடலும் ஊடல் நிமித்தமும்

தண்பொருநை தொடர் -1

முகைத்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல்