ஆச்சியும் கொடையும்!
இன்றைக்கு இருக்கும் சிறார்களுக்கு எல்லாம் எங்களைப் போன்ற ஒரு இளம் பருவம் கிடைத்திருக்குமா என்றால் அது ஐயமே!
ஒவ்வொரு விடுமுறையின் போதும் ஆச்சி வீட்டுக்கு செல்வதோ அத்தை வீட்டுக்கு செல்வதோ சித்தப்பா வீட்டிற்கு செல்வதோ அக்கா வீட்டிற்கு செல்வதோ மிகவும் அலாதியான ஒரு அனுபவம்.
திறன்பேசி எல்லாம் அறிமுகமாகி இருக்காது அந்த காலகட்டத்தில் எங்களது இளம் பருவம் எந்தவித கவலையும் இன்றி துள்ளி பறந்து திரியும் ஒரு பறவையைப் போல தான் இருந்தது.
இன்றைக்கு இருப்பதை போல கோடிங் வகுப்புகளோ திறன் வகுப்புகளோ கோச்சிங் வகுப்புகளோ இல்லாத விடுதலை காலம் அது.
காலையிலேயே இட்லியோ சோறோ பொங்கி எடுத்துக்கொண்டு ஆற்றில் குளித்து மத்தியானம் வெயிலில் பாறையில் அமர்ந்து நாங்கள் உணவருந்திய அந்த நாட்கள் எல்லாம் இப்பொழுது நினைவுக்கு வருகின்றன.
ஒவ்வொரு முறை வண்டி மறிச்சான் கோவில் கொடைக்கு செல்லும் பொழுது சம்படத்தில் அடைத்து தரும் கொழுக்கட்டையை நினைக்கும் போது நாக்கில் எச்சில் ஊறுகிறது. ஒரு நாள் அட்டெண்டன்ஸ் போயிரும் என்று சாயந்தரம் கிளம்பி சென்று மறுநாள் காலை முதல் பஸ் ஏறி காலை 9 மணிக்கு பள்ளிக் கூடத்திற்கு அனுப்பி விடுவாள் அம்மை. இன்று விடுமறை இருக்கிறது என்னிடம், அப்படி அட்டெண்டன்ஸ் தேவையில்லை. என்ன இனி அழைக்க யாருமில்லை!
அம்பை என்றாலே தாமிரபரணி, தாமிரபரணி என்றாலே அம்பை எனுமளவு ஆற்றையும் அம்பை மக்களையும் பிரிக்கவே முடியாது. பிறப்பா இறப்பா சடங்கா கல்யாணமா திருவிழாவா எது என்றாலும் அது ஆற்றுத் தண்ணீர் இல்லாமல் ஆற்றங்கரைக்குச் செல்லாமல் நடக்காது. உயிரோடு கலந்து போன தாமிரபரணியைப் பிய்த்தது போல இருக்கிறது இப்போது.
அம்பைக்கு போகும் போது எல்லாம் தினம் ஆத்துக்கு போக வேண்டும் என அடம்பிடிக்கும் என்னை என்ன செய்வதென தெரியாமல் வளவு வீட்டு மாமா உடன் அனுப்பி வைப்பாள் ஆச்சி. வளவு வீட்டு மாமா இன்று இல்லை என்றாலும் ஆற்றுக்குள் இறங்கப் பயந்த என்னைத் தூக்கி ஒரே முழுக்காக ஆற்றுக்குள் இறக்கியது நினைவிலிருந்து அகலவில்லை! இன்றைக்கும் இருக்கிறதா என தெரியவில்லை அந்த 505 சோப்பு.
ஆஞ்சொன்னாப்ல என்று அடிக்கொரு தரம் சொல்லும் ஆச்சி போட்டு தரும் லோட்டா காப்பியின் மணம் காற்றில் விரவி நிற்கிறது. வளவில் நின்ற சிவப்புகொய்யா மரம் எப்போது தறிக்கப்பட்டதோ அதன் பின்னரே ஆச்சி நடமாட்டம் இல்லாமல் ஆகிப்போனாள்.
கல்லிடையில் ஏழாந் திருவிழாவும் அம்பையில் எட்டாந் திருவிழாவும் பார்க்க, பங்குனி சித்திரையில் மட்டுமே கிடைக்கும் பிலாக்காய் கொத்தி கறி வைத்து சாப்பிட இனி செல்வது எளிது அல்ல! கூட்டத்தில் ஒருவராய் நின்றுவிட்டுத் திரும்பத்தான் முடியும்.
தனிமையிலேயே கிடந்து உழன்றவள், நாலு பேரைப் பார்க்க வேண்டும் பேச வேண்டும் என்கிற ஆசையில் ஒரு சக்கர நாற்காலி கேட்டுக் கொண்டு இருந்தாள். தை மாதம் கொடை பாக்க போகும் போது வாங்கித் தருகிறேன் எனச் சொல்லி இருந்தேன். இந்த வருடம் கொடையும் இல்லை இப்போது ஆச்சியும் இல்லை.
Comments
Post a Comment