ஜூம் புரட்சி

ஞாயிற்றுக்கிழமை அன்றே இதை எழுத வேண்டுமென்று எண்ணினேன். வேறு வேலை வந்து விட்டதால் முடியவில்லை. 

ஜூம் செயலியின் வாயிலாக இலண்டனில் வசிக்கும் சிவசுப்பிரமணியம் அவர்களுடன் ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சியை எனது நண்பர் திரு சிறீராம் அநக்ஸ் மற்றும் சசி அவர்களின் Bibliotheca - இணைய தமிழோசை அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. 
ஏறத்தாழ ஒரு 25 பேர் கலந்து கொண்டிருந்தனர். 

திரு சிவசுப்பிரமணியம் அவர்கள் குரல் போட் ( Kural bot)^¹ எனப்படும் இணையப் பயன்பாட்டை ஏற்படுத்தியவர். இதன் மூலம் நீங்கள் வேண்டுகிற திருக்குறளைப் பக்கம் திருப்பி தேட வேண்டிய தேவை இல்லை. அந்த முகநூல் பக்கத்தில் உள்ள Messaging option ல் சென்று குறளுக்குரிய வரிசை எண்ணை மட்டும் அனுப்பினால் போதும். அந்த எண்ணிற்குரிய குறள் உங்களுக்கு செய்தியாக உடனடியாக வரும். விரிவான விளக்கத்திற்காக கீழே படத்தை இணைத்துள்ளேன். 

மேலும் அன்றில் டாட் இன் ( andril.in )^² என்ற இணையதளத்தின் மூலமாக சங்கப்பாடல்களை பல தலைப்புகளின் கீழ் தமிழ் படிக்காதவர்களும் எளிதாக பார்க்கும் வகையில் கொடுத்திருக்கிறார். அது பெரிய புத்தகங்களைத் தேடி திருப்புவதற்கு பதிலாக மிக எளிதாக இருக்கிறது.

இதை ஒரு சிறிய முன் முயற்சியாக செய்திருக்கிறார். அவருடைய கனவு திட்டம் 'அமேசன் அலெக்சா' போன்ற மனிதனுடன் உரையாடும் கருவியை தமிழில் தருவிப்பதாகும். அதற்கு தமிழில் உள்ள வார்த்தைகள் அனைத்தையும் இணையத்தில் ஏற்ற வேண்டும் என்பதால் அந்த வேலையை இப்பொழுது ஆழ்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள் அவரும் அவருடன் செயலாற்றும் தன்னார்வத் தொண்டர்களும். அந்தத் திட்டத்தின் பெயர் ப்ராஜெக்ட் நிகண்டியம் (Project Nigandiyam)^³.
நிகண்டு என்றால் அகர முதலி என்பது நமக்குத் தெரியும். அதே போன்றதொரு இணைய அகரமுதலி என்பதே ப்ராஜெக்ட் நிகண்டியம் ஆகும். 

அவர் வணிக நோக்கில் இதை செய்யவில்லை. தமிழ், இணையத்தில் வளரவேண்டும், வருங்கால தலைமுறைகளிடம் சென்று சேர வேண்டும் என்பதையே நோக்கமாகக் கொண்டு இருக்கிறார். 

கலந்துரையாடலில் இது அனைத்தையும் அவர் தெரியப்படுத்தினார். திருநெல்வேலி- பாளையங்கோட்டையில் பிறந்து, கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் கணினிப் பொறியியல் பயின்று, பல நிறுவனங்களிலும் வேலை பார்த்து, பின்னர் சொந்தமாக நிறுவனம் தொடங்கி இப்பொழுது லண்டனில் சென்று பணிபுரிகிறார். தன்னுடைய துறை சார்ந்த பணியை மட்டும் செய்திடாமல், தன் துறையிலும் தமிழை எவ்வாறு மேம்படுத்தலாம் வளர்த்தெடுக்கலாம் என அவர் மேற்கொண்டு வரும் இந்த சீரிய முயற்சி உறுதியாக பாராட்டுக்குரியது. இந்த கலந்துரையாடலின் பின் எனக்கும் தோன்றுகிறது, நான் சார்ந்த துறையைப் பற்றிய செய்திகளை தமிழில் எவ்வாறு தெரிவிக்கலாம் என! முயன்று பார்க்கிறேன் உருக்கு வார்த்தலைப் பற்றி (Steel making) தமிழில் ஒரு கட்டுரை எழுதுவதற்கு.

^¹ Please visit kural bot in facebook by using this link  https://www.facebook.com/kuralbot/
^² Visit web page andril by this link https://www.andrill.in/ 
^³ Project Nigandiyam https://ta.wikisource.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D

Comments

Popular posts from this blog

ஊடலும் ஊடல் நிமித்தமும்

தண்பொருநை தொடர் -1

முகைத்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல்