டப்பா

'ஏலேய் அந்த டப்பாவ எடு' என்று ஆச்சி கூப்பிட்டதும் ஓடியாந்தேன்.
'ரெண்டு துண்டு கருப்பட்டியும் கொஞ்சம் அடியொட்டிய தூளுமா கிடந்தது'. அந்தப் டப்பாவ மட்டும் ஆச்சி பத்திரமா வைத்திருந்தாள். ஏதோ தன் அப்பன் வீட்டு சீதனம் போல. அதை எடுத்தாலே ஏச்சு விழுந்துரும். அப்படி இருக்கையில் என்னக் கூப்பிட்டு எடுக்கச் சொன்னது ஆச்சரியம் தான்.
எடுத்துக் கொண்டு வரும்போதே ரெண்டிலே ஒரு துண்டை வாயில் போட்டு மென்று விட்டே வந்தேன்.
'யாச்சி என்ன ஒத்த துண்டு கருப்பட்டி தானே இருக்கு! இது காணுமா காப்பி போட?' என்று கேட்டேன்.
'சிரிச்சுக்கிட்டே, ஒன்ன நீ தின்னிட்டு இப்ப ஏங்கிட்ட ஒன்னும் தெரியாத மாரி நடிச்சா நம்பீருவனோ!' - 'அதுலாம் போடலாம்' என்றபடியே காதை ஒரு திருவு திருவினாள்.
ஒத்த துண்டு கருப்பட்டியில் போட்டதாயிருந்தாலும் நன்றாகத் தானிருந்தது அன்னைக்கு ஆச்சி போட்டுத் தந்த கருப்பட்டிக் காப்பி.
****
'வெளிய போனவுக எல்லாம் உள்ள வரும்முன்ன கால அலசிட்டு வரனும்யா. திரும்பி பார்க்காம வரனும் இன்னா! சொன்னது கேக்கா?' என்று அதட்டுப் போட்டாள் மூத்த அத்தை மூக்கம்மா. எல்லோரும் கால்கழுவி உள்ளே சென்று கொண்டிருந்தார்கள். நானும் கழுவப் போனேன்.

'இல்லத்தே! அந்த டப்பாவ ஆச்சி எவ்ளோ பத்திரமா வச்சிருந்தா தெரியுமா? என்ட்ட கூட தரமாட்டா. ஆனா இன்னக்கி அது கால் கழுவல்லா கெடக்கு!' என்று சொல்லிக் கொண்டிருந்தபோதே 'ஏலேய், யான் அழுவுத? அதுதாம் எல்லாம் முடிஞ்சிட்டுல்லா' என்று என்னை ஆற்றித் தேற்றிக்கொண்டிருந்தாள் அத்தை. கால்கழுவ கிடந்த டப்பா மறுநாள் குப்பையில் வீசப்பட்டுக்கிடந்தது.

Comments

Post a Comment

Popular posts from this blog

ஊடலும் ஊடல் நிமித்தமும்

தண்பொருநை தொடர் -1

முகைத்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல்