ஆசிரியர் தினம்'17 - தொடர் பதிவு 1

ஆசிரியர் தினம்'17 சிறப்பு தொடர் பதிவு:
'என்னைச் செதுக்கியவர்கள்'

வாழ்க்கையில் அனைவருக்கும் ஆசிரியர் ஏதோ ஒருவகையில் இருக்கிறார்கள். அது தொழில் ரீதியாகவோ அல்லது கல்வி ரீதியாகவோ அல்லது துறை ரீதியாகவோ.
என் வாழ்க்கையில் ஆசிரியர்களின் பங்கு அளப்பரியது. அநேகமாக கல்லூரி படிக்கும் நான் எதிர்கொள்ளக் கூடிய கடைசி ஆசிரியர் தினமாக இருக்கலாம். அதை முன்னிட்டு நான் என்னை செதுக்கிய எமது ஆசிரியப் பெருமக்களை பற்றி எழுத வேண்டும் எனத் தோன்றியது. இதோ அதனது செயல்வடிவு;

நாள்-1: பார்வதி டீச்சர்

அது என்ன வகைப்பாடோ தெரியவில்லை இங்கிலீஷ் மீடியம் பிள்ளைகள் எல்லாம் 'மிஸ்' என்றும் தமிழ் மீடியப் பிள்ளைகள் எல்லாம் 'டீச்சர்' னும் கூப்பிடுவது எழுதப்படாத விதி போல தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. எங்களுக்கு 'மிஸ்' என்கிற அந்நியத்தை விட 'டீச்சர்' என்றால் தான் நன்றாக இருக்கும்.
- எனக்கு 9,11,12ஆம் வகுப்புகளில் கணிதப் பாடம் எடுத்தவர். பசங்களோட மனநிலை எங்க டீச்சருக்கு ரொம்ப நல்லாவே தெரியும். அவங்க யாரையும் அடிச்சு பார்த்தே கிடையாது. படிக்காமவோ அமைதியாகவோ ஏதோ ஒரு கவலையுடன் வகுப்பில் யாரேனும் இருந்தால் அவர்களை தனியாக அழைத்து என்ன பிரச்சினை என்று விசாரித்து அவர்களை ஆற்றித் தேற்றும் அரிய பண்பு அவருடையது.
என்னைப் பொறுத்தவரை எனக்கு 'டியூசன்' போய் படிக்குமளவு வசதியில்லை. தினம் பள்ளியில் சொல்லித் தந்ததை வார இறுதி 'சனி & ஞாயிறு'க்கிழமைகளில் தன்னுடைய வீட்டில் வைத்து பாடம் சொல்லிக் கொடுத்த பெருந்தகை அவர்கள்.

முக்கியமாக என் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வு 'எனக்காக எங்க டீச்சர் விட்ட கண்ணீர்' - பள்ளியில் 10ஆம் வகுப்பு படிக்கிற போது 'மாநில முதலிடம்' என்று சொல்லி ஏத்தி விட்டார்கள். நான் என்னால் அவ்வளவு தூரம் எட்டிப் பிடிக்க முடியாது என்று முதலிலிருந்து சொல்லி வந்தேன். முடிவில் என் வார்த்தைகள் பலிதம் ஆகியிருந்தன. ஆனால் ஊருக்கு பழைய விசயம் தான் கண்ணில் பட்டது. அவர்கள் நோகாமல் நோகடித்தார்கள். நொந்து போய்விட்டேன். எங்க டீச்சர் என்னை அழைத்து ஆறுதல் சொல்லி அவர்களும் அதைக் கேட்டு அழுதுவிட்டார்கள். மறக்க முடியாத உதவி அது. இன்றும் வீட்டுக்குப் போனால் நலம் விசாரித்து விட்டுத் தான் வருவேன். மற்றுமொரு ஆசிரியர் அப்படி கிடைப்பது கடினம்.

என் உயிர் உள்ளவரையிலும் அவருக்கு நன்றி செலுத்தக் கடன்பட்டிருக்கிறேன்.

Comments

  1. Yaa man great teacher great human being she also help me to take a very good mark in maths in my 10th standard

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ஊடலும் ஊடல் நிமித்தமும்

தண்பொருநை தொடர் -1

முகைத்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல்