பாகுபலி - பலியாகிப் போன சிவகாமி
ஒரு படம் பார்க்கிறோம். பார்க்கிற ஒவ்வொருவருக்கும் ஒருமாதிரியான கண்ணோட்டம் உண்டு - படம் பற்றி - அதன் கதையம்சம் பற்றி.
பாகுபலி-2
பலருக்கும் படம் பார்க்கும்போது பாகுபலியே மனதில் வட்டமடிப்பார். எனக்கு ராஜமாதா -சிவகாமி தேவியும் அவருடைய ஆளுமையும் தான்.
ஒரு பெண்ணிற்கு முக்கியத்துவம் வாய்ந்த அரச பதவிகளை எல்லாம் ஆரியச் சமூகத்தில் கொடுக்கப்பட்டது இல்லை.
பெண்ணை சரிக்கு நிகர் சமானம் வைத்தது திராவிடக் கலாச்சாரத்தில்தான். பாகுபலி படத்தில் ராஜமாதாவாக சிவகாமி தேவி ஒரு தேசத்தைச் சீரும் சிறப்புமாக 25 ஆண்டுகாலம் ஆண்டதோடு அடுத்தடுத்த அரசர்களை நியமனம் செய்வதிலும் அவருக்கு இருந்த செல்வாக்கு சிதறடிக்கமுடியாதது. அது பண்டைய திராவிட அரசமைப்பில் பெண்களின் பாத்திரத்தை விவரமாக விளக்குகிறது. அதோடு நில்லாமல் யுவராணியான தேவசேனை மாமன்னர்கள், இளவரசர்களோடு போர் புரிய விரும்பும் மறப்பெண்ணாகவே இருக்கிறாள். இதுதான் திராவிட நாகரிகம். பெண்ணோடு ஆண் போட்டியிடுவது இழிவன்று. இயற்கை. தமிழ்நாட்டில் இன்றும் பெண்ணாச்சி, பெண்ணாளுமையின் எச்சங்கள் மிச்சமிருக்கின்றன. பாண்டியப் பேரரசின் தலைநகரான மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு பெண்களும் ஆண்டிருக்கின்றனர். இன்னும் ஒருபடி மேலே பெண்கடவுளரான அங்கயற்கண்ணி என்னும் மீனாட்சி பேரரசியாக ஆண்டதற்குச் சாட்சியாக சித்திரை திருவிழாவின் 9 ஆம் நாளன்று கோலாகலமாக 'மீனாட்சி பட்டாபிஷேகம்' நடைபெறுகிறது பட்டாபிஷேகத்தின் போது மீனாட்சிக்கு வைரத்தினாலான மணிமகுடத்தையும், செங்கோலையும் அணிவித்து 'வேப்பம்பூ' மாலை அணிவிக்கின்றனர். பாண்டிய மன்னர்கள்வேப்பம்பூ மாலை சூடியே பதவியேற்றனர் என்பது வெள்ளிடைமலை.
அதன் மறுநாள் 'மீனாட்சி திக்கு விஜயம்' நடக்கிறது. திருவிழாக்கள் மக்களின் வாழ்வியலைப் பிரதிபலிப்பவை. எனவே பெண்ணரசி மீனாட்சி போலவே பெண்கள் நாடாண்டது உண்மையே. ராணி மங்கம்மாள் எனும் பெண்ணரசி ஆண்டதற்கு மட்டும் சாட்சிகள் இருக்கின்றன. மற்றவர்களுக்கு கிடைக்கவில்லை எனினும் உண்மையே அது.
இதைப்போலவே 'கல்கி'யின் பொன்னியின் செல்வன் நாவலில் குந்தவை நாச்சியர் எப்படி நுணுக்கமாக, காரியகரணமாக நடந்து கொண்டு ஒரு மாபெரும் சோழ சாம்ராஜ்யத்தை ஸ்தாபிதம் செய்யக் காரணமானார், அருண்மொழி வர்மரை எப்படி காரமாணார் என்பதை கல்கி முக்கியமாகக் குறிப்பிட்டுருப்பார்.
ஆகவே தமிழ்க்குடிகளிடையே ஆண்-பெண் பாகுபாடு இல்லாமல் தான் இருந்திருக்கிறது என்பதற்கான வரலாற்று சான்றே மேற்சொன்னதெல்லாம். பின்னால் ஆரியப்படையெடுப்பு, வடவர் உள்வரவினால் பெண் ஆளுமையும், பெண் கல்வியும் மாற்றப்பட்டிருக்கிறது.
பாகுபலி மூலம் தெரிந்து கொள்ள வேண்டும் என்னவென்றால் இதுதான். உண்மையிலேயே 'சிவகாமி தேவி' யே கதையின் மையம். பாகுபலியை விட முக்கியத்துவம் வாய்ந்த பாத்திரம். ஆண் மக்கள் ராஜ்ஜியத்தை கைப்பற்றுவது இயல்பு, போரிடுவது இயல்பு - எனவே பாகுபலி அதையெல்லாம் செய்ததில் ஆச்சரியம் இல்லை. சிவகாமி தேவியை மையப்படுத்தி எடுத்தால் படம் ஓடாது என்பதால் இயக்குனர் பாகுபலியை பிரதானப்படுத்திவிட்டார். எது எப்படியோ படம் பார்த்தோம் ரசித்தோம், சிலாகித்தோம் என்றில்லாமல் ஏதேனும் ஒன்றிரண்டைத் தெரிந்து கொண்டு செல்வோம் மக்களே.
Comments
Post a Comment