சொக்கப்பனையும் திருக்கார்த்திகையும்
திருக்கார்த்திகை என்று சொல்லப்படும் திருவிழா குறிப்பாக தமிழர்க்கே உரியதாகும். ஆதி காலத்து தமிழர்களான மலையாள மக்களும் இந்த திருநாளை வெகு சிறப்பொடு கொண்டாடுகின்றனர்.
கார்த்திகை மாதத்து முழுநிலவும் கார்த்திகை நாள்மீனும் சேர்ந்து வரும் நாளாகும்.இந்தியாவெங்கும் தீபாவளி அன்று விளக்கீடு செய்வது வழக்கம். ஆனால் தமிழகம் மற்றும் கேரளத்தில் மட்டும் திருக்கார்த்திகை தினத்தன்று விளக்கீடு செய்யப்படுவது வழக்கமாக உள்ளது.
இத்திருநாளுக்கு சங்க காலத்திலிருந்தே கொண்டாடப்பட்டதற்கான சான்று உள்ளது. பின்வரும் பாடல்கள் மூலமாக அறியலாம்.
வீரை வேண்மான் வெளியன் தித்தன்
முரசுமுதல் கொளீஇய மாலை விளக்கின்
வெண்கோடு இயம்ப, நுண்பனி அரும்பக்
கையற வந்த பொழுது – நற்றிணை 58
சீர்த்து விளங்கித் திருப்பூத்தல் – பரிபாடல் திரட்டு 10
இதில் தென்மாவட்டங்களிலும் மத்திய மாவட்டங்களிலும் கோவில்களில் சொக்கப்பனை கொளுத்துவது கார்த்திகை அன்று ஒரு சிறப்பாக நிகழ்த்தப்படுகிறது. திருக்கார்த்திகை திருநாள் சிவபெருமானோடும் முருகப்பெருமானோடும் பொருத்திக்கொள்ளப்பட்டிருந்தாலும் வைணவக் கோவில்களிலும் சொக்கப்பனை தகித்தல் விமரிசையாகவே கொண்டாடப்படுகிறது.இது சங்க காலத்தில் கார்த்திகை விளக்கீடு சமயம் கடந்த வகையில் கொண்டாடப்பற்றிப்பதை காட்டுகிறது எனில் மிகையில்லை எனலாம். வட மாவட்டங்களிலும் மேற்கு மாவட்டங்களிலும் சொக்கப்பனை கொளுத்தப்படுவது பற்றி எமக்கு தெரியவில்லை. இலங்கை நாட்டில் தமிழர் அதிகமாய் வசிக்கும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நல்ல உற்சாகத்தோடு கொண்டாடப்படுகிறது. திருவண்ணாமலை கோவிலில் சொக்கப்பனை கொளுத்தப்படுவதில்லை.
![]() |
| இலங்கை யாழ்ப்பாணம் - நல்லூர் கந்தஸ்வாமி கோவிலில் சொக்கப்பனை கொளுத்தப்படும் காட்சி. |
மேலும் இது இதைக் காட்டுகிறது என்று சொல்வோமெனில் பனையின் முக்கியத்துவத்தை காட்டுகிறது என்று சொல்லலாம். பனை தமிழர் பண்பாட்டில் எத்தகைய இடத்தை பெற்றிக்கிறதை அறியலாம். சிவபெருமானையே பனையோடு பொருத்தி பார்த்தது இதற்க்கு சான்றாகும்.
மேலும் சைவ சமயத்தின் வழிநடவும் சைவ வேளாளர் ( பிள்ளைமார் ), செங்குந்த முதலியார் போன்ற சாதியாரிடத்து இந்த பண்டிகை சற்று கூடுதல் முக்கியத்துவத்துடன் கொண்டாடப்படுகிறது.
எங்க நெல்லை மாவட்டத்தில் வெகு சிறப்பாகவே இந்த திருவிழா கொண்டாடப்படுகிறது. அந்தக் காலத்தில் எல்லாம் சொக்கப்பனை கட்டி அதன் மேல் ஏறி அய்யர் சூடன் கொளுத்திவிட்டு வந்து கீழ இறங்கி அடியில் சூடன் கொளுத்துவார்.இப்போதெல்லாம் ஒரு பெரிய வேட்டியை மேலிருந்து தொங்க விட்டு விடுகிறார்கள்.அதில் தீப் பற்றவைத்தவுடன் மேல் வரை பற்றிக் கொள்கிறது. இந்த சொக்கப்பனை எரிந்து முடிந்தவுடன் அந்த எறிந்த குச்சியை எடுக்க போட்டி போடுவார்கள். ஏனென்றால் அதை வயலில் நட்டுனா வெள்ளாமை நல்ல இருக்கும் என்பது ஐதீகம்.அதைப்போலவே வீட்டில் கொண்டு பொய் வைத்தால் நல்லது என்றும், பாச்சா, பூச்சி பட்டை வராதுன்னும் சொல்லுவாவோ.
சூந்துக் குச்சி - இது அந்த காலத்து மத்தாப்பு போன்றது. நீண்ட குச்சி போன்றது. எரிந்து கொண்டே இருக்கும் சற்று நேரத்துக்கு பற்ற வைத்த பின்பு.அப்போதெல்லாம் சுற்றுச்சூழலையும் மாசுபடுத்தாமல் கொண்டாடப்பட்டிருக்கிறது. இப்பொது அதைக் காண்பது கொஞ்சம் அரிதாகிவிட்டாலும் அம்பாசமுத்திரம், கல்லிடையில் கார்த்தியலை ஒட்டி விக்காங்க.
கிளியஞ்சட்டி- இது சிறிய மண்விளக்கு. இதில் விளக்கு பொறுத்த முகம் இருக்காது.எங்கு திருப்பினாலும் விளக்கு பொருத்திக்கிடலாம். மண்ணால் செய்யப்படும் இது பல்லாண்டுகாலமாக ஒவ்வொரு வீட்டிலும் பாதுகாக்கப்படும். உடைந்து விட்டதெனில் அந்த வருடம் புதுசா வாங்கி பழைய விளக்குகளோடு வைத்து விடுவதுண்டு.
( இந்த மாதிரியான விளக்கு நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் தான் இந்த பெயரில் அழைக்கப்படுகிறது. இங்கு தான் உற்பத்தியும் செய்யப்படுகிறது. இங்க விட்டுட்டா இலங்கை யாழ்ப்பாண வட்டாரத்திலும் , கிழக்கு மாகாணத்திலும் தன இப்பெயரில் அழைக்கப்பட்டு இதை போல விளக்குகளும் உற்பத்தி செய்யப்படுகின்றன.)
கார்த்திகை பொரி: நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் கார்த்திகை தினத்தை ஒட்டி விற்கப்படும் பொரி. சாதாரண பொறி போல அல்லமழுப்பு சேர்க்காமல் செய்யப்படும் இது. நல்ல இருக்கும். அம்மா மண்டை வெல்லெப்பாகு சேர்த்து விரவி தருவாங்க.
இதன் பின்னே உள்ள அறிவியல் உண்மை:
திருநெல்வேலி தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் தி.சு.பாலசுப்பிரமணியன் கூறியிருப்பதாவது:
திருநெல்வேலி தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் தி.சு.பாலசுப்பிரமணியன் கூறியிருப்பதாவது:
பூச்சித் தாக்குதல் மிகுந்த பருவம்: பனியும், மழையும் அதிகரித்துக் காணப்படும் பிசானப் பருவம் என்ற பின்பருவத்தில்தான் பூச்சித் தாக்குதல் அதிகம் காணப்படும். பிசானம், தாளடி, சம்பா பயிர்கள் இந்தப் பூச்சித் தாக்குதலுக்கு ஆளாகின்றன. வடகிழக்குப் பருவமழை காரணமாக கூட்டுப் புழுக்களில் இருந்து தாய் அந்துப் பூச்சிகள் அதிகளவில் வெளிவரும். இந்த அந்துப் பூச்சிகள் இடும் முட்டையிலிருந்துதான் புழுக்களும், பூச்சிகளும் உருவாகி பயிர்களைத் தாக்கி சேதப்படுத்துகின்றன.இத்தகைய தாக்குதலுக்கு மூல காரணமாக விளங்கும் தாய் பூச்சிகளை விளக்கு வெளிச்சத்தால் கவர்ந்து அழிப்பதன் மூலம் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம். இந்த விளக்குப் பொறியைத் தான் திருக்கார்த்திகை தீபம் என்ற அடிப்படையில் வீடுகளில் ஏற்றி வைத்து முன்னோர்கள் கடைப்பிடித்து வந்துள்ளனர்.
வீடு தோறும் விளக்கு: முன்னிரவு நேரத்தில்தான் பயிர்களுக்கு தீங்கு விளைவிக்கும் பூச்சிகளின் நடமாட்டம் அதிகம் காணப்படும். எனவே, ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பின் ஒரு பகுதியாக வீடுகள்தோறும் வாயில்களில் விளக்கு வைக்கப்படுகிறது.
திருக்கார்த்திகை நாளிலும், அதன் தொடர்ச்சியாக மூன்று நாள்களிலும் அதிக அளவில் விளக்குகள் ஏற்றப்படுகின்றன. மேலும், பலர் கார்த்திகை மாதம் முழுவதுமே வீடுகளில் வாசலில் தீபம் ஏற்றுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். இந்த விளக்கு வெளிச்சத்தில் முன்னிரவு நேரத்தில் வரும் தீமை செய்யும் பூச்சிகள் கவர்ந்து இழுத்து அழிக்கப்படுகின்றன.
சொக்கப்பனை: பெரிய அளவில் பூச்சிகளைக் கவர்ந்து இழுத்து அழிக்க சொக்கப்பனை எரிக்கும் நிகழ்வு பெரிதும் உதவியாக உள்ளது. கார்த்திகையை முன்னிட்டு கோவில்களிலும், வீதிகளிலும் சொக்கப்பனைகள் கொளுத்தப்படுகின்றன. சிவன், முருகன், பெருமாள் கோவில்களில் வெவ்வேறு நாள்களில் இந்த சொக்கப்பனை கொளுத்தப்படுவதால் விடுபட்ட பூச்சிகளும் முழுமையாக அழிக்கப்படுகின்றன என்றார் அவர்.



Comments
Post a Comment