மிதிகட்டை மிதித்தே ஒரு பயணம்

                அது என்னவோ தெரியவில்லை ....எனக்குள்ள எப்போதுமே ஒன்று என்னை தூண்டிக் கொண்டே இருக்கிறது எங்கயாச்சும் போகணும் போகணும் அப்டினு.
               சரினு முடிவு பண்ணி ஒரு இடத்துக்கு போலாம்னு திட்டம் போட்டேன். எப்போ பார்த்தாலும் பஸ்லயோ இல்லனா ரயிலயோ தான போறோம், இந்த தடவ புதுசா ஏதாச்சும் முயற்சி  பண்ணலாமேன்னு மிதிவண்டில - அதம்யா சைக்கிள்ல போகலாம்னு போன ஒரு பயணம் தான் இது...

             எங்க கல்லூரி CIT ல இருந்து சைக்கிள்லேயே தமிழ்நாட்டின் எல்லையில் அமைந்துள்ள ஆனைக்கட்டி வழியா கேரள மாநிலத்தின் மன்னார்க்காடு - பாலக்காடு சென்று மீண்டும் கல்லூரிக்கே திரும்புவது தான் எங்களது பயணத்திட்டம்.
           விடிந்தும் விடியாத காலை நேரம்..கோயம்புத்தூர்க் காரரர்களுக்கு பழகின மெல்லிய பனி படர்ந்த அந்தக் காலைப் பொழுதிலேயே கிளம்பலாம்னு ரெடியாயிட்டோம். என்ட்ட எங்கே சொந்தச் சைக்கிள், கடன் வாங்குனதுதான். அதகூடவும் சரியான கண்டிசன்ல இல்ல. என்னுடைய மூத்த மாணவர் ( சீனியர் )  அண்ணன் தான் எனக்கு வழிகாட்டி - எல்லாமும். அவர் வண்டிய பார்த்துட்டு அத கொஞ்சம் சரிபண்ணுனாரு... அப்படியே கிளம்பினோம்.மெதுவாகவே அழுத்தத் தொடங்கினோம். வண்டி மேற்குத்திசையில் செல்லத்துவங்கியது. வண்டியில் வேகமானி இருந்ததால் அதைப் பார்த்துக் கொண்டே சென்றேன். வேகம் 25 கி.மீ/மணி என்று காட்டியது. எங்களோடு எனது சீனியர் கேசவமூர்த்தி அண்ணனோட அண்ணன் திரு.சங்கர் அவர்களும் வந்தார். மூவராகச் செல்லத் தொடங்கினோம். 100 அடி சாலை வழியாக சென்று GCT வாசல் சென்று தடாகம் சாலையில் இணைந்து செல்லத் தொடங்கினோம். அது பாட்டுக்கு வண்டி நகன்றது.   
              பெரிய தடாகம் தாண்டி ஒரு சாலையோர சர்பத் கடையில் வண்டியை நிறுத்தி தண்ணீரும் சர்பத்தும் சாப்பிட்டோம். அந்தக் கடைக்காரத் தாத்தா நல்லா பேசிக்கிட்டு இருந்தாரு... 
 நான் கேட்டேன் - "தாத்தா தனியாவே இருக்கீங்களே உங்களுக்கு சொந்தக்காரங்கள பார்க்கனும்லா தோணலயா ? " அப்படினேன்.
  அவரு " தம்பி அதல்லாம் பார்த்தா இந்த உலகத்துல வாழ முடியுமா? பொண்டாட்டி போனப்பறம் நான் இங்க வந்து வருசம் 15 ஆச்சு... அது பாட்டுக்கு ஓடுது வாழ்க்க தம்பி" ன்னார்.
         அங்க வச்சு பழம் சாப்பிட்டோம். அவர் சொன்ன முக்கியமான செய்தி - "தம்பிகளா பழத் தோல கொஞ்சம் தள்ளி போடுங்க, பெரியவங்க அந்த வாசனைக்கு இந்த பக்கம் வந்துருவாங்க, கொஞ்சம் தள்ளிப் போடுங்கய்யா" ன்னார்.
             வண்டி வேகம் கூட்டி முன்ன போனோம். மாங்கரை தடுப்பு சாவடியைத் தாண்டி சென்றோம். மலைப்பாதை ஆரம்பித்தது - ஏத்தமும் இறக்கமுமாக பாதை மாறி வந்தது. ஆனைகட்டியைத் தாண்டி கொஞ்சம் பாதை இறங்கியது. கேரளாவில் நுழைந்தாலும் தமிழ்நாட்டு வாசனை மாறவில்லை. அப்படியே மட்டத்துக்காடு தாண்டி கோட்டத்துறையை அடைந்தோம். 
     அங்கிருந்த ஒரு மலையாளக்காரரின் ஓட்டலில் காலை உணவாக புட்டும், ஆப்பமும் சாப்பிட்டோம். நீண்ட நாட்களுக்குப் பிறகு எனக்கு ஆப்பம் சாப்பிட கிடைத்த வாய்ப்பு அது. அந்த ஊர்களில் பெரும்பான்மையாக தமிழர்கள்தான் இருந்தனர். கோட்டத்துறை சிறுவாணியின் கரையில் அமைந்திருக்கும் சிற்றூர். சாப்பிட்டுட்டு கொஞ்ச தூரம் போனதுமே ஆறு வந்தது. ஆத்தைப் பார்த்ததுமே ஒரு சந்தோஷம் மனசுக்குள்ள. அது இனம் புரியாத உணர்வு. உடனே சைக்கிள நிப்பாட்டிட்டு கீழ போய் முகத்த கழுவி தண்ணி குடிச்சிட்டு வந்து திரும்ப போனோம்..

                                                                    சிறுவாணி ஆறு 


      அகளி ங்கிற ஊரத் தாண்டி போக ஆரம்பிச்சோம். இங்க கொஞ்சம் மலையாள வாடை அடிக்க ஆரம்பித்திருந்தது. மேலும் சென்ற போது ஒரு பெரிய மலையேற்றம் ஒன்று வந்தது. என்னால அதுல அழுத்த முடியல. தள்ளிட்டே மேல போனேன். சங்கர் அண்ணனனாலயும் அழுத்த முடியாம உருட்டிட்டே மேல வந்தாரு. மேட்டிற்கு வந்தப்புறம் வண்டிய ஓட்ட ஆரம்பிச்சோம். தாவளம் என்ற இடத்த தாண்டி போனோம். அந்த இடத்துல ரோட்டுக்கு பக்கத்திலேயே ஒரு ஆறு வந்து கொண்டிருந்தது. விசாரித்ததில் அது தான் படியளக்கும் பவானி என்று தெரிந்தது. கொஞ்ச தூரத்தில் ஆற்றைக் கடக்கும் வகையில் ஒரு சிறு பாலம் ஆற்றின் மேல் இருப்பதைப் பார்க்க முடிந்தது. கீழே இறங்கிப்  போய் ஆற்றில் முகங்கழுவி ஆசை தீரத் தண்ணீர் குடித்தோம். 

      

படியளக்கும் பவானி ஆறு 
          மேலும் பயணமானோம். பாதை ஏற்ற இறக்கங்களோடு சென்றது. அப்படியே அட்டப்பாடியைக் கடந்து சென்றோம். முக்களி தாண்டிய போது ரோட்டின் இருபுறமும் அடர்ந்த மரங்கள்....குளுமை... அடுத்ததாக மலையிறக்கம் ஆரம்பித்தது. வழியில் சில இடங்களில் புகைப்படம் எடுத்துக் கொண்டு பயணமானோம். 
பசுமை போர்த்திய சோலைக்காடுகள் 

பள்ளத்தாக்கு காட்சி - முக்களி  

     அபது சரியான இறக்கமாக இருந்தது .அங்கு தான் அது நிகழ்ந்தது...............................................
         ஒரு கணம் ......உயிர் தப்பியது. ஒரு வளைவான இறக்கத்தில் இறங்கும் போது சாலையின் ஓரமாகச் சென்றேன்... வழுவக்கூடாது என்பதற்காக பிரேக் பிடித்தேன் அப்படியும் தவிர்க்கமுடியவில்லை....அது நடந்துவிட்டது. ஆம். சைக்கிள் அந்தப்புறம் போக நான் ரோட்டில் - தலையில் தலைக்கவசம் போட்டிருந்ததால் உயிர் தப்பியது.முகத்தில் சிறிய  சிராய்ப்பு - உதட்டிலும் - ரோட்டை உரசியதால். நல்ல வேளையாக ஆண்டவன் அந்தக்கணத்திலும் உதவினார் - கண்ணாடி உடையவில்லை மாறாக லென்ஸ் மட்டும் விழுந்தது. அதை எடுத்து எப்படியோ ஒட்டி வைத்து சைக்கிள்யே அழுத்தத் தொடங்கிவிட்டேன்.  எப்படியோ மன்னார்க்காடு போய்ச் சேர்ந்தோம். கொஞ்சம் தேங்காய் எண்ணெய் மட்டும் வாங்கி வாயில தடவிகிட்டேன்....பயங்கரமாக எரிந்தது. எப்படியோ சமாளித்துப் போனேன். 
            ஒருவழியாக மன்னார்க்காட்டில் மதிய சாப்பாட்டை 3 மணிக்கு முடித்துக்கொண்டு பாலக்காடு ரோட்டில் பயணமானோம். ஏற்ற இறக்கமுமான பாதையில் சைக்கிளும் தவ்வி தாவி சென்று கொண்டு இருந்ததது. 
       எவ்வளவு பாசமான மக்கள் !! - வழியில் நிறுத்திய இடங்களில் எல்லாம் மலையாள மக்கள் பாசத்துடன் என்னிடம் அந்த காயத்துக்கான காரணத்தை கேட்டனர் - நானும் எனக்கு தெரிந்த மலையாளத்தில் சொல்லிக் கொண்டே வந்தேன். மலையாள சிறு பிள்ளைகள் பள்ளி முடித்து வரும் வழியில் என்னிடம் விசாரித்தார்கள் . சில சிறு பிள்ளையள் டாட்டா காட்டிக் கொண்டு சென்றார்கள். 
              ஒரு வழியா பாலக்காடு வந்து பழைய NH  47 ( தேசிய நெடுஞ்சாலை 47 ) யில் இணைந்து கோவைக்கு விரைந்தோம். வாளையாறு கடந்து மதுக்கரை தாண்டி பைபாஸ் வழியாக விரைந்து ஒண்டிப்புதூர் சிங்காநல்லூர் வழியாக கல்லூரிக்கு ராத்திரி 9 மணிக்கு வந்து சேர்ந்தோம். 
           வாழ்க்கைல ஒரு சாதனை பண்ணின மாதிரியான ஒரு உணர்வு உள்ளுக்குள்ள இருந்து எழுந்தது. 200 கிமீ நானும் சைக்கிள்ள போய்ட்டேன் என்கிற ஒரு பெருமிதமும் விபத்தினால் ஏற்பட்ட காயத்துக்கு மருந்திட்டன. 

Comments

  1. journey always taught something beyond 1000 words..life is only once so enjoy your life with full potential..fill it with full of ur desire..hurdles are usually come,for that we never change our destination..

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ஊடலும் ஊடல் நிமித்தமும்

தண்பொருநை தொடர் -1

முகைத்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல்